Sunday 10 April 2016

மேயர் என்.சிவராஜ் உருவாக்கிய மக்கள் விளையாட்டரங்கம், நேரு விளையாட்டரங்கமாக மாறின கதை


முதல்வர் ஜெயலலிதாவின் ஆணவ சான்று...

கௌதம சன்னா
 
பேராசிரியர் என் சிவராஜ்
புரட்சியாளர் அம்பேத்கருக்குப் பிறகு அகில இந்திய அளவில் தலித் மக்களின் தனிப்பெரும் தலைவராக விளங்கியவர் தந்தை என்.சிவராஜ் அவர்கள். அவர் பல்வேறு பதவிகளை வகித்தவர். வழக்கறிஞர். சென்னை சட்டக்கல்லூரியின் பேராசிரியர், அகில இந்திய அட்டவணைச் சாதிகள் கூட்டமைப்பின் தலைவர். அம்பேத்கர் உருவாக்க முயன்ற இந்திய குடியரசு கட்சியை உருவாக்கி இந்தியா முழுமைக்கு வளர்த்தவர். சென்னையில் வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளுள் ஒருவர். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தந்தை சிவராஜ் அவர்கள் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகவும் பின்பு மேயராகவும் பதவி வகித்தவர்.

மேயர் சிவராஜ் தமது பதவியின் போது
தந்தை சிவராஜ் அவர்கள் சென்னை மேயராக 20.11.1945 அன்று பதவியேற்றார். 20.11.1946 அன்று மேயர் பதவியை நிறைவு செய்தார். இந்த இடைப்பட்ட தமது பதவி காலத்தில் அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் என்பதை மாநகராட்சியின் அறிக்கைகள் சான்றுகளாக விளங்குகின்றன. அவர் தமது பதவி காலத்தில் சென்னை நகராட்சியில் பல சாலைகளை அமைத்தார் , பாலங்களை கட்டினார், குடிசைப்பகுதிகளை காரை வீடுகளாக மாற்றியது, கண்வரும் பூங்காக்களை அமைத்தார் (தி நகரில் உள்ள நடேசன் பூங்கா, சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள நேப்பியர் பூங்கா உட்பட) மேலும் பள்ளிகளை புதுபித்தது, புதிதாக உருவாக்கியது, பள்ளிகளில் மதிய உணவினை அளித்தது உள்ளிட்ட பல பணிகளை அவர் நிறைவேற்றினார். இவற்றில் சிவராஜ் அவர்கள் நிகழ்த்திய சாதனைகளில் சிகரமானது சென்னையில் மிக பிரமாண்டமான ஒரு விளையாட்டுத் திடலை அமைத்தது.

மக்கள் விளையாட்டுத் அரங்கம் உருவாக்கம் (People Stadium)
மேயர் சிவராஜ் அவர்கள் திறந்த மக்கள் விளையாட்டு அரங்கத்தின் திறப்பு விழாவின் போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகள்
இன்றைக்கு சென்னையை தெரிந்தவர்களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பக்கத்தில் உள்ள மூர் மார்க்கெட் பகுதியைத் தெரிந்திருக்கும், அந்த இடத்திற்கு அருகில் சென்னை மாநகராட்சிக் கட்டிடம், சென்னை நகர அரங்கம்  (Town Hall)  மற்றும் மிகப்பெரிய குளம் ஒன்றும் இருந்தன. .குளத்தில்  அல்லி மலர்கள் நிறைந்திருந்ததால் அதற்கு அல்லி குளம் என்று பெயர். அதற்கு அருகில் கடந்த 1900களில் மிகப்பெரிய பூங்கா ஒன்று வெள்ளையர்களால் அமைக்கப்பட்டிருந்தது, அதற்கு மக்கள் பூங்கா (People’s Park) என்று பெயர். அந்தப் பூங்காவைச் சுற்றி ஏராளமான காலி நிலம் இருந்தது அந்த காலி நிலத்தில்தான் மூர் மார்கெட், சென்னை மிருகக்காட்சி சாலை ஆகியன பிற்காலத்தில் அமைக்கப்பட்டன.

இந்த காலி நிலப்பகுதியில் பகுதியில்தான் பெரிய விளையாட்டு அரங்கம் கட்ட வேண்டும் மாநகராட்சியினால் 25 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சிக்கப்பட்டது, ஆனால் கைகூடவில்லை. பேராசிரியர் சிவராஜ் அவர்கள் மேயர் ஆனவுடன் மேற்கண்ட காலி இடத்தில் பெரிய விளையாட்டு அரங்கம் கட்டப்படும் என்று சென்னை மாநகர மன்றக் கூட்டத்தில் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அதன் பின்பு உடனடியாகப் பணிகள் தொடங்கின. பெரிய இடமாக இருந்தததால் அதை சமப்படுத்துவதற்கு ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. ராணுவம் களத்தில் இறங்கி பெரிய பெரிய தளவாடங்களைப் பயன்படுத்தி நிலத்தை சமப்படுத்திக் கொடுத்ததுடன், கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள உதவியது. விளைவாய் மிக குறுகிய காலத்திற்குள் அதாவது பத்து மாதத்திற்குள் விளையாட்டு அரங்கம் கட்டி முடிக்கப்பட்டது.

மக்கள் விளையாட்டரங்கம் திறப்பு.
திறப்புவிழாவின் போது மேடையில் வரவேற்பினை ஏற்றுக்கொள்ளும் மேயர் சிவராஜ்
மக்கள் அரங்கம் திறப்பு விழாவின் போது நடைபெற்ற பேரணியை மேடையிலிருந்து பார்வையிடும் மேயர் சிவராஜ், அன்னை மீனாம்பாள், அமைச்சர் மற்றும் அதிகாரிகள்.


11 லட்சத்து நாற்பதாயிரம் ரூபாயில் செலவில் கட்டி முடிக்கப்பட்டத் திடல், ஒரே நேரத்தில் 35,000ம் பேர் அமரக்கூடிய மாபெரும் விளையாட்டுத் திடலாக எழுந்தது. அது மக்கள் பூங்கா இருக்கும் இடத்திலேயே கட்டப்பட்டதால் அதற்கு மக்கள் விளையாட்டு அரங்கம் (People Stadium) என்று பெயரிடப்பட்டது.

மக்கள் விளையாட்டு அரங்கம் ஓர் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டது மிக பிரமாண்டமான சாதனையாக இருந்தது எனவே மாநகராட்சியின் ஆண்டு விழாவை அரங்கத்தின் திறப்பு விழாவிலேயே நடத்த வேண்டும் என மேயர் சிவராஜ் அவர்களின் தீர்மானத்தின் பேரில் இரு பெரும் விழாவாக நடைபெற்றது.

திறப்பு விழாவிற்கான பேரணி யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள் மற்றும் அலங்கார வண்டிகளோடு சென்னை தீவுத் திடலில் தொடங்கி தாமஸ் மன்றோ சிலை வழியாக வந்தன. மன்றோ சிலை அருகில் மேடையில் அமர்ந்திருந்த மேயர் சிவராஜ் உள்ளிட்ட தலைவர்கள் பேராணியை பார்வையிட்டனர். தொடர்ந்து சென்ற பேரணி சென்ட்ரல் ரயில் நிலைய மேம்பாலத்தினைக் கடந்து மூர் மார்கெட் வழியாக மக்கள் விளையாட்டு அரங்கை வந்தடைந்தது. கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடந்தன. கோலாகலமான நிகழ்வுகள் நிறைவு பெற்றன. மேயர் சிவராஜ் அவர்களின் பணியின் சாதனைகளை பத்திரிக்கைகள் புகழ்ந்து எழுதின.

மக்கள் விளைட்டுத் திடல் சர்வதேச அளவில் அனைத்து விளையாட்டுகளும் விளையாடுவதற்கு தேவையான வசதிகளைக் கொண்டதாக இருந்தது. சர்வதேச கிரிக்கெட், கால்பந்தாட்டம், தடகளப் போட்டிகள் ஆகியன நடத்துவதற்கு எற்ற வகையில்  மைதானம் அமைக்கப்பட்டதால் சர்வதேசப் போட்டிகள் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நடந்தன. அதுவுமின்றி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் உள்ளூர் போட்டிகள் நடந்தவண்ணம் இருந்தன. மாநகராட்சியின் ஆண்டு அறிக்கையில் மக்கள் விளையாட்டு அரங்கத்திற்கான தனி செலவின அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

எனவே தந்தை சிவராஜ் அவர்களின் சாதனைகளில் மிகப்பெரியதாக மக்கள் விளையாட்டு அரங்கை அமைத்ததை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அவரது சாதனை எப்படி மறைக்கப்பட்டது. அது எவ்வாறு நடந்தது என்பதை பார்க்க வேண்டும்.

டாக்டர்.அம்பேத்கர் சிலை அமைப்பும் பெயர் மாற்றமும்
1963 ம் ஆண்டு மக்கள் விளையாட்டு அரங்கத்தின் முன் வைக்கப்பட்ட
டாக்டர்.அம்பேத்கர் சிலையின் பீடத்திலிருந்தக் கல்வெட்டு
நாடு விடுதலைப் பெற்ற பிறகு சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தது. 1963ஆம் ஆண்டு முதல் 1967 வரை சென்னை மாநிலத்தின் முதல்வராக பக்தவச்சலம் இருந்தார். இந்த காலத்தில்  சென்னை மாநகராட்சியின் மேயராக குசேலர் பதவியேற்றார். தலித் சமூகத்தின் தலைவர்களுள் ஒருவராக இருந்த குசேலர் அவர்கள் தந்தை சிவராஜ் அவர்களின் தொடர்பில் இருந்தவர், விளைவாக 28.11.1963
மீண்டும் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை
அன்று நேரு விளையாட்டரங்கின் நுழைவாயிலில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை நிறுவி அதை அன்றைய முதல்வர் பக்தவச்சலம் அவர்களின் கைகளால் திறக்க வைத்தார். மிக கம்பீரமாக வட்டமான படிகளோடு பீடம் அமைக்கப்பட்டது. படிகள் உயர்ந்து உச்சியில் அம்பேத்கர் சிலை நிற்கும்படி அமைக்கப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் நேரு 1964 மே மாதம் 27ம் நாள் மறைந்தார். இதன் விளைவாய் நேருவின் நினைவாக தந்தை சிவராஜ் அவர்கள் கட்டிய மக்கள் விளையாட்டரங்கத்தின் பெயர் நீக்கப்பட்டு நேரு விளையாட்டரங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அதன் பிறகு எந்தவிதமான மாற்றமும் இன்றி மக்கள் நேரு விளையாட்டுத் திடலும், அம்பேத்கர் சிலையும் பராமரிக்கப்பட்டு வந்தன. பின்புதான் 30 ஆண்டுகள் கழித்து நேரு விளையாட்டு அரங்கம் வேறு தோற்றத்தை எடுத்தது. 

நேரு ஸ்டேடியம் புதுப்பிப்பு 1993
புதிய தோற்றத்தில் நேரு விளையாட்டரங்கம்
கருணாநிதி அவர்களின் ஆட்சி 1990ல் கலைக்கப்பட்டப் பிறகு செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சியில் 01.05.1992ம் நாளன்று தந்தை சிவராஜ் கட்டிய நேரு விளையாட்டு அரங்கம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படும் என்று அறிவித்தார். அதன்படி நேரு விளையாட்டரங்கம் இடிக்கப்பட்டதுடன், மேயர் சிவராஜ் அவர்கள் திறந்ததைக் குறிக்கும் கல்வெட்டுக்களும், நுழைவாயிலில் இருந்த டாக்டர். அம்பேத்கர் சிலையும் அகற்றப்பட்டன. தொடர்ந்து 260 நாள்களுக்குள் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு 17.01.1993 அன்று திறப்பு விழா நடைபெற்றது.

மீண்டும் கட்டப்பட்ட திடலின் திறப்பு விழா கல்வெட்டு
விழாவில் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் தலைவர்கள் கலந்துக் கொண்டனர். ஏற்கெனவே இருந்த மக்கள் விளையாட்டு அரங்கம் பத்து மாதங்களுக்குள் கட்டப் பட்டதால், புதிய நேரு விளையாட்டு அரங்கம் 6 மாதங்களுக்குள் கட்டப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அது கின்னஸ் சாதனையாகவும் அறிவிக்கப்பட்டது.

திறப்பு விழா கல்வெட்டு அமைந்துள்ள இடம்
திட்டமிட்ட முறையில் முதல் அரங்கம் கட்டப்பட்டபோது தந்தை சிவராஜ் அவர்கள் திறந்ததாக இருந்த கல்வெட்டுகள் அகற்றப்பட்டு கவனமாக மீண்டும் அமைக்கப்படவில்லை. மேலும் அம்பேத்கர் சிலையும் மீண்டும் நிறுவப்படவில்லை. எனவே மேற்கண்ட வரலாற்று சான்றுகளை மீண்டும் அமைக்க வேண்டும் என தலித் இயக்கங்கள் அரசிடம் கோரின. ஆனால் ஜெயலலிதா அரசு அதை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.

ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் சிலை
எனவே சென்னையில் தலித் போராட்டக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. 

அம்பேத்கர் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும், தந்தை சிவராஜ் அவர்களின் பெயர் பொறித்த கல்வெட்டுகள் மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டங்களுக்கு பௌத்த பெரியார் சுந்தராசனார் தலைமை தாங்கினார். சொல்லின் செல்வர் சக்திதாசன், டாக்டர் சேப்பன், உள்ளிட்ட முன்னணி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் விளைவாய் ஜெயலலிதா அரசு இறங்கிவந்து அம்பேத்கர் சிலையை மீண்டும் அமைக்க உறுதி தந்தது. ஆனால் சிலையை நேரு விளையாட்டரங்கின் முன்னே வைக்காமல் பெரிய மேடு காவல் நிலையத்தின் அருகில் சாலை ஓரத்தில் வைத்துவிட்டது. இதனால் தலித் மக்களிடையே கொதிப்பு உருவாகி மேலும் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களினால் தந்தை சிவராஜ் அவர்களின் பெயர் பொறித்த கல்வெட்டுகள் வைக்கும் கோரிக்கை மறைந்தே போனது.

அதுமட்டுமின்றி 1994ம் ஆண்டு நேரு விளையாட்டரங்கிற்கு செயலலிதா வந்தபோது தற்குறிகளான அவரது கட்சியினர் அம்பேத்கர் சிலையை முற்றாய் மறைத்து பேனர்களை வைத்தனர். அதனால் அதை அகற்ற வேண்டி போராட்டங்கள் நடைபெற்றன.

ஜெயலலிதா இரண்டாம் முறை வைத்த கல்வெட்டு

பிறகு ஆட்சிகள் மாறின, காட்சிகள் மாறின. 2011ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அவர்கள் நேரு விளையாட்டரங்கில் சில புதுப்பிப்பு பணிகளை மேற்கொண்ட போது அதற்காக ஒரு தனிக் கல்வெட்டையும் வைத்தார். அது 11.11.2013 அன்று திறக்கப்பட்டது. அப்போதும் தந்தை சிவராஜ் திறப்புப் பற்றி யாருக்கும் எந்த கவலையும் இல்லாமல் போனது. தந்தை சிவராஜ் அவர்கள் திராவிட இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவர் என்று பேசிவரும் திராவிடக் கட்சிகள் எவையும் அவரின் வரலாற்றுப் பங்களிப்பைப் பற்றி பேசுவதும் இல்லை. அவருக்கான அங்கீகாரத்தை அளிப்பதும் இல்லை என்பதற்கு இது அப்பட்டமான சாட்சி.

இப்படி உயர்ந்த வரலாற்றையும், போராட்டங்களை கட்டமைத்த வரலாறும், தலித் மக்களின் உன்னத சாதனைகளையும் கொண்டதுதான் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கம். ஆனால் இந்த முற்போக்கு முகமூடிகள் தலித் மக்களுக்கு எந்த வரலாற்று பின்னணியும் இல்லை என்பதுபோல பேசிக் கொண்டுத் திரிகிறார்கள். எப்போதுதான் இது மாறுமோ தெரியவில்லை.

நேரு விளையாட்டு அரங்கத்தை கடக்கும் போதெல்லாம் எனக்கு இந்த வரலாற்று சம்வங்கள் நினைவுக்கு வரும். மனம் நெருடும். இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இனி அந்த நெருடல் உருவாகும் என நினைக்கிறேன். 
அதோபோல, சிந்தாதிரிப் பேட்டையில்  உள்ள நேப்பியர் பூங்கவை அமைத்ததும் மேயர் சிவராஜ் அவர்கள்தான். பின்னர் அது திமுக ஆட்சியில் மே தினப் பூங்கா என பெயர் மாற்றப்பட்டது. புதிய கல்வெட்டுகள் வைக்கப்பட்டன. மேயர் சிவராஜ் அவர்களின் பெயர் முற்றிலிம் மறைக்கப்பட்டது.
இந்த மோசடிகளை செய்பவர்கள் நாமறிந்த முற்போக்காளர்கதான். வரலாற்றை மறைத்து அவர்கள் எதை உருவாக்க முயல்கிறார்கள் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

குறிப்புகள்.
1. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் தந்தை சிவராஜ் அவர்களின் குடும்ப புகைப்படத் தொகுப்பிலிருந்து பெற்றவை. சிவராஜ் அவர்களின் இளைய மகன் தயாசந்தர் அவர்கள் அதை எனக்கு அளித்தார். அவற்றில் சில மட்டுமே இங்கு பதியப்பட்டுள்ளது.

2. மக்கள் விளையாட்டுத் திடலில் அம்பேத்கர் சிலையை வைத்த மேயர் குசேலர் அவர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு பாட்டனார் முறை. எனது தந்தையின் சித்தப்பா. அவர் பிறந்த ஊர் தற்போது ஊத்துக்கோட்டைக்கு அருகே, ஆந்திராவில் சேர்க்கப்பட்டிருக்கும் மதனம்பேடு கிராமம்.

3. பழைய நேரு விளையாட்டு அரங்கத்தின் புகைப்படத்திற்காக அலைந்துக் கொண்டிருக்கிறேன். அது கிடைக்கவில்லை. என் சிறிய வயதில் அந்த அரங்கில் விளையாடிய நினைவு இருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு கால் பந்தாட்ட போட்டிகள் நடத்தும் அளவிற்கு அது பெரியது.
  
நன்றி - நமது தமிழ்மண் ஏப்ரல் 2016

No comments:

Post a Comment