கௌதம சன்னா
மாவீரர்.ஆரிய சங்காரன் தந்தை சிவராஜ் அவர்களுக்குப் பிறகு குடியரசு கட்சியின் தமிழ்நாட்டு தலைவராக இருந்தவர். சமரசமற்ற அம்பேத்கரிய போராளி. அனல் பறக்கும் பேச்சாளர். பின்னி மில் தொழிலாளர்களின் தலைமையேற்று போராட்டங்களினால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு போராட்டங்களை முன்னெடுத்தவர்.
திராவிட இயக்கத்தினர் செய்யத் துணியாத பணிகளை துணிச்சலோடு முன்னெடுத்தார். பெரியார் தாலி எதிர்ப்பு பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவரின் மேடையிலேயே தனது தாலியை அறுத்தெரிந்த ஞான சௌந்தரி அம்மாள் அவர்களை தமது பத்திரிகையான ஆரிய சங்காரன் இதழில் விரிவாக அறிமுகப்படுத்தினார்.
திமுகவின் தாழ்த்தப்பட்டோர் விரோத நடவடிக்கைகளை கடுமையாக அம்பலப்படுத்திக்கொண்டிருந்தார். குறிப்பாக வியாசர் பாடியில் அம்பேத்கர் பெயரில் ஒரு கல்லூரி அமைக்க வேண்டும் என்று சத்தியவாணி முத்து அம்மையார் கேட்ட போது இரண்டு லட்ச ரூபாய் இருந்தால் கட்டித்தர தயார் என்று கருணாநிதி அறிவித்தார், அதை சவாலக ஏற்று நாடு முழுதும் மடிப்பிச்சை ஏந்தி இரண்டு லட்ச ரூபாய் பணத்தை அரசிடம் தந்தார் சத்யவாணி முத்து அம்மையார். இதனால் தலித் மக்களிடையே கடுமையான கசப்புணர்வை திமுக சம்பாதித்துக் கொண்டது. அதிலிருந்து திமுக-வை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார் ஆரிய சங்காரன்.
ஆரிய சங்காரன் என்றால் ஆரியர்களை அழிக்க வந்தவன் என்று பொருள். தன் பெயருக்கு ஏற்ப கடுமையான பரப்புரையை முன்னெடுத்துக் கொண்டிருந்தவரை கண்டு திமுக அஞ்சியது. செங்கல்பட்டில் பரப்புரை கூட்டத்தை முடித்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த சங்காரன் இரவில் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். தலித் மக்களிடையே கடும் கொந்தளிப்பை அன்றைக்கு உருவாக்கியது. ஊடகங்களில் விபத்து என்று செய்தி வெளியானது. ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
சென்னை பெரிய மேட்டில் அவரது உடல் கிடத்தப்பட்டிருந்த அவரது வீட்டிற்கு எம்ஜியார், நெடுஞ்செழியன் மற்றும் அவர்களது முன்னணி தலைவர்கள் வந்தனர். சங்காரனின் உடல் பெரிய மேட்டிலிருந்து மூலக்கொத்தளம் இடுகாடு கொண்டு செல்லப்பட்டபோது எம்ஜியாரும் அவரது அமைச்சர்களும் கூடவே நடந்து சென்று உடலை அடக்கம் செய்தனர் என்றால் நிலைமையின் தீவிரத்தை புரிந்துக் கொள்ளுங்கள்.
சரி.. படுகொலை செய்யப்பட்டார் ஆரிய சங்காரன் என்றால் அதற்கு யார் மீது மக்கள் சந்தேகப்பட்டிருப்பார்கள்.. உங்களது யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
சன்னா
No comments:
Post a Comment